Monday, 28 September 2015

வீழ்வேனென்று நினைத்தாயோ-கார்த்திகா AK"அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பெதற்கு?"

"
கொண்டவன் மரித்தால்
நீயும் உடன்கட்டை ஏற வேண்டும்"

கொளுந்திட்டு எரியும் தீயில் பிடித்து உள்ளே தள்ளிய காலம் உருண்டோடி
விட்டது..சுவடுகள் செத்து சுண்ணாம்பாகிய வருந்தத்தக்க ஞாபகங்கள் அவை..

"
வாசல் தாண்டி வெளி
வராதவளே பத்தினியாம்"

பெண்களின் கற்பை சோதித்த கயவர்களின் பேச்சுக்கள் காற்றோடு பறந்துவிட்டன....

"
கொலையும் செய்வாள்
பத்தினி !"

ஆம் .....எழுத்துக்கள் தீண்டினாலே குற்றமெனக் கருதப்பட்ட நிலைமைதனை
விரட்டியடித்துவிட்டார்கள் எம் குல முத்துக்கள்....ஏட்டுக் கல்வி
கட்டாயமாக்கப் பட்டதனால் இளங்குருத்துகள் அடுக்களையில் வாட்டி எடுக்கப்
படுவதில்லை ....

பால்ய திருமணங்கள் ஒடுக்கப்பட்டதனால் சிறுமிகளின் கருவறைகள் நிறைந்தே
சாகடிக்கப் படுவதில்லை .....என்னவென்று தெரியாத போதிலே திருமணம் கழிக்கப்
படுவதும் இறந்துபோன சிறு வயது கணவனுக்காய்(??!)விதவைக் கோலம் பூண்டு
அறைக் கூண்டுக்குள்ளே அடங்கி உயிரை உருக்கி தன்னைத் தானே
எமனுக்கிரையாக்கிக் கொள்வதும் அடியோடு அகன்றோழிந்து விட்டன இன்று!

பெண் பிள்ளைக்கு சொத்திலும் சம பங்குண்டு ....சட்டங்கள் எங்களை
கைப்பாவையிலிருந்து கை மாற்றின......சொல்வதை எல்லாம் கேட்டு நடக்கும்
பணியாட்களாய் ஒடுங்கி இருந்த எம் வர்க்கம் மண்ணிலிருந்து துளிர்விடத்
தொடங்கி அரும்புகள் மலர்ந்து மணம் வீசுகின்றன...

"
சட்டங்கள் ஆள்வதும்
பட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள்
நடத்த வந்தோம்"

ஆடு மேய்க்கும் அப்பத்தாவிலிருந்து அரசாளும் அம்மா வரை அனைத்திலும் பெண்கள் !
பெண்கள் !பெண்கள்!!

ஒவ்வொருமுறை தலைமைகளில் பெண்களின் பெயர்கள் பளிச்சிடும்போது இனம் புரியாத
உணர்வு பெருமிதம் கொள்ளச் செய்கிறது.....என்னவள் இவள்....என்குலம்
மதிக்கப் படுகிறது...

"
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகளை
சான்றோர் எனக் கேட்ட தாய்!"

தன் கனவுகள் மெய்ப்படாத ஒவ்வொரு தாய்மையும் நிறைவு கொள்கிறது
....
மகள்களின் முன்னேற்றத்தில் முக்தி பெறுகிறது....

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் பாவமென்று கொண்டது போய் நாடு
காக்கும் நற்பணியில்
இந்திய இராணுவத்தில் உணவு மறந்து உற்ற சுற்றம் துறந்து சேவையில் தன்னை
மறக்கிறாள் பெண்....

நிலவைக் காட்டிச்
சோறு ஊட்டியவள்
நிலவிற்கே செல்கிறாள்!!

செவ்வாய் தோசமென்று கொண்டோரே
கேளுங்கள் .....செவ்வாயிலும் வசிக்கப் போகிறோம் நாங்கள்....

"
பெண்கள் நாட்டின் கண்கள் "

பேருந்தின் பின்புறத்திலும் பயணச் சீட்டின் அடியிலும் எழுதி மறைத்தால்
நீங்கள் கொண்ட ஆதிக்க வெறி ஒழிக்கப்படுவதில்லை.....மாறாக எடுத்து
வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனம் கொண்டு கடக்கிறாள் பெண்ணானவள்!

இன்றும் கூட தன் கனவுகளை மறந்து ஏதோ பிறந்தோம் ஊருக்காக வாழ்ந்தோம்
கவலைகளை லட்சியங்களை புதைத்தோம் என்று வீழும் பெண்மை மீட்டெடுக்கப்படல்
மிக மிக அவசியமே!

"
கனவுகளைப் புதைத்த
கண்கள் வெளிச்சங்களால் தீண்டப்படுவதில்லை!"

பிறந்த குழந்தை ,பேதைச் சிறுமிகள் ,இளம்பெண்கள், பெண்கள் ,வயதானவர்கள்
பாரபட்சம் என்பதே இல்லை வன்புணர்வு கொள்ளும் வெறியர்களுக்கு....

பெண்ணொருத்தி சிந்தும்
இரத்தத் துளிகள் ஒவ்வொன்றிற்கும்
ஆதிக்க சமூகம் பதிலாய் ஆக வேண்டும்

இல்லையேல் ,

இரத்த வாடைக்காக
மனித வேட்டையாடும் விலங்குகளாய்
பெண் வாடை கொள்ள
யுத்தம் செய்து மடிந்து வீழும்
அற்பர்களால் தோற்கடிக்கப்பட்டுவிடும்
நம் தாய் பூமி...

உன் தாயும் உடன்பிறந்தவளும் அழுகிறாள் என்றால் வீறு கொண்டெழும் ஆண்மைக்கு
அடுத்த வீட்டுப் பெண்கள் ஊறுகாயோ?

பெண்களை மதிக்கும் சமூகம்
தழைத்தோங்கும் இல்லையேல்
வேர்களைத் தீய்த்து
விழுதுகளை கொன்ற பாவத்தினால்
முளை மறந்து போகும் விதைகள்!!

பெண்ணே!
விழித்திரு!
விழி திறவா நிலையிலும்
உன்னைத் திறந்திரு!!

என்னுடைய சொந்தப் படைப்பே இது..வலைப்பதிவர் திருவிழா-2015 மற்றும்
தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ்
இலக்கியப்போட்டிகள்-2015 க்காகவே எழுதப்பட்டது.இதற்கு முன் வெளியான
படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும்
வெளிவராது-கார்த்திகா AK

6 comments:

 1. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
  http://dindiguldhanabalan.blogspot.com

  ReplyDelete
 2. மரியாதைக்குரியவரே,
  வணக்கம்.
  தங்களைப்போன்ற இள வயதுடையோர் இணையத்தில் தமிழ்ப் பங்காற்ற வேண்டும்.என
  வாழ்த்தும் அன்பன்,
  C.பரமேஸ்வரன்,
  http://konguthendral.blogspot.com,

  ReplyDelete
 3. வெற்றி பெற வாழ்த்துகள் ...கட்டுரை நன்று..

  ReplyDelete
 4. படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

  இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

  நன்றி...

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
  http://dindiguldhanabalan.blogspot.com

  ReplyDelete
 5. வணக்கம்.வலைப்பதிவர் சந்திப்புத்திருவிழாவிற்கு விழாக்குழு சார்பாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.நன்றி.

  ReplyDelete
 6. அருமையான ஆக்கம்! வாழ்த்துக்கள் நன்றி!

  ReplyDelete